சதத்தை தவறவிட்டது குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற சுப்மன் கில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் குறித்தும், சதத்தை தவறவிட்டது குறித்தும் பேசியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தியது. முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த நிலையில் தவான் 58 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
பின்னர் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும், 8 ரன்கள் எடுத்த நிலையில் சூரியகுமார் யாதவும் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடி வந்த சுப்மன் கில் ஒரு கட்டத்தில் இந்திய அணி 36 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்திருந்த போது 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். எனவே நிச்சயம் அவர் இப்போட்டியில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Trending
அப்போது தொடர்ச்சியாக மழை வந்ததன் காரணமாக 36 ஓவரிலேயே இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வருவதாக மூன்றாவது நடுவர் அறிவித்தார். இதன் காரணமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பினை கில் தவறவிட்டார். ஆனாலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் பலரும் மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை பெற்ற சுப்மன் கில் இந்த போட்டியில் அவர் விளையாடிய விதம் குறித்தும், சதத்தை தவறவிட்டது குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நான் நிச்சயம் இந்த போட்டியில் சதம் அடிப்பேன் என்று உறுதியாக நம்பினேன். ஆனால் மழை வருவதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. இந்த சதத்தை தவறவிட்டது சற்று வருத்தமாக தான் உள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் நான் நன்றாக துவங்கியும் ஆட்டம் இழந்துவிட்டேன். அதனால் இம்முறை சரியான பந்துகளை கணித்து அதற்கு ஏற்றார் போல் விளையாடி வந்தேன்.
நான் 98 ரன்களில் இருந்த போது மழை வருகையில் இன்னும் ஒரு ஓவர் எனக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படி ஒரு வேலை அந்த ஓவர் கிடைத்திருந்தால் நிச்சயம் என்னால் சதத்தை பூர்த்தி செய்திருக்க முடியும்.
இருப்பினும் இயற்கை என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் நான் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன். இந்த தொடரில் என்னுடைய ஆட்டம் எனக்கு முழு திருப்தி அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now