
இலங்கை - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இலங்கை அணி அவர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே குவித்தனர். ஆஃப்கானிஸ்தான் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூகி 4 விக்கெட்டுகளையும், முஜிபுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் சார்பாக ரஹ்மத் ஷா, ஷாஹிதி, ஓமர்சாய் ஆகியோர் அரைசதம் அடித்து இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.