
அமெரிக்காவில் நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு டிராவிஸ் ஹெட் - கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 21 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திர 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தார். பின்னர் ஸ்மித்துடன் இணைந்த கிளென் மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் அதிரடியாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பின் களமிறங்கிய முக்தார் அஹ்மத் 19 ரன்களையும், பைனார் 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 207 ரன்களைக் குவித்து வலிமையான இலக்கை நிர்ணயித்தது. சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஹசன் கான், ஹாரிஸ் ராவுஃப், ஜுவானோய் ட்ரைஸ்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.