IND vs ENG : வாஷிங்டனுக்கு காயம்; இந்திய அணிக்கு சிக்கல்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, கவுண்டி லெவன் அணிகளுக்கிடையே 3 நாள் பயிற்சி ஆட்டம் டர்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் அஜின்கியா ரஹானே காயம் காரணமாக விளையாடவில்லை. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய வீரர்கள் ஆவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கவுண்டி அணிக்காகக் களமிறங்கினர். இதில் ஆவேஷ் கானுக்கு இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் பயிற்சி ஆட்டத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது நாள் ஆட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கும் தற்போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியன. இதுகுறித்து பிசிசிஐ அலுவர் வெளியிட்ட தகவலின் படி "சுந்தரின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் முழுமையாகக் குணமடைய சுமார் 6 வாரங்கள் தேவைப்படும். அதனால் இங்கிலாந்துடனான டெஸ்ட் ஆட்டங்களில் அவர் விளையாடமாட்டார்" என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்திய அணியின் தொடக்கவீரர் சுப்மன் கில் பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே காயம் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில், தற்போது மற்ற இந்திய வீரர்களும் அடுத்தடுத்து காயமடைவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now