
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 230 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 87, சூரியகுமார் யாதவ் 49 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் அதை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 129 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்களை சாய்த்தனர். அதனால் 6வது வெற்றியை பதிவு செய்த இந்தியா அரையிறுதி உறுதி செய்துள்ள நிலையில் இங்கிலாந்து 99% வெளியேறுவது உறுதியாகியுள்ளது.