
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- சைம் அயூப் களமிறங்கினர். இதில் சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷஃபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். அதன்பின் ஷஃபீக் 102 ரன்களிலும், கேப்டன் மசூத் 151 ரன்னில் என வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சௌத் சகீல் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அகா சல்மான் சதமடித்து அசத்தியதுடன் 104 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.