
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும், பிரப்ஷிம்ரன் சிங் 42 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 34 ரன்களையும் சேர்த்து அசத்தினர். ஹைதராபாத் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் ஆட்டமிழக்க, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தியதுடன் 141 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனமூலம் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.