
மும்பை - ஹைதரபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மும்பை அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது.
இதில் ரஹானே 139 ரன்களுடனும், சர்ஃபராஸ் கான் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்நிலையில் இன்றும் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடித்துள்ளார் ரஹானே. 261 பந்துகளில் 3 சிக்ஸர், 26 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தி்ல் ஜெயிஸ்வால் 162, சூர்யகுமார் யாதவ் 90, சர்ஃபராஸ் கான் 126 ரன்கள் எடுத்தார்கள்.
மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 651 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் இரட்டைச் சதமடித்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.