
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் காலிறுதியில், ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. ரிக்கி புய் 149 ரன்களும் கரண் ஷிண்டே 110 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் விஹாரி 27 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2ஆவது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார்.
முதல் நாளன்று 16 ரன்களில் காயமடைந்து ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. ஸ்கேன் செய்து பார்த்ததில் இடக்கை மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதனால் 5, 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தேவைப்பட்டால் விஹாரி விளையாடட்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்தது.