
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் துருவ் ஜுரெல் 90 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். இதில் பென் டக்கெட் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாவது ஓவரை வீசிய அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழக்க, அஸ்வின் தனது மூன்றாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.