
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கேவை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். பின்னர் இணைந்த சாம் கரண் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 32 ரன்களில் டெவால்ட் பிரீவிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய சாம் கரணும் 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சஹால் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மர்க்கோ ஜான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.