ஐபிஎல் 2022: ஒட்டுமொத்த ஆட்டத்தையும் மாற்றிய சஹால் தவறவிட்ட கேட்ச்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னிங்ஸில் முதல் ஓவரில் யுஸ்வேந்திர சாஹல் கோட்டைவிட்ட கேட்ச்சை பிடித்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் அந்த கேட்ச்சை கோட்டைவிட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக போட்டியின் முடிவு அமைந்தது.
ஐபிஎல் 15ஆவது சீசனில் அபாரமாக விளையாடி இறுதிப்போட்டி வரை சென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த சீசனில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, மிகச்சிறப்பாக விளையாடி அறிமுக சீசனிலேயே இறுதிப்போட்டி வரை சென்றதுடன் கோப்பையையும் தூக்கியது.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணி அதன்பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சீசனில்தான் இறுதிப்போட்டிக்கு வந்தது. எனவே ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
Trending
ஆனால் இந்த சீசன் முழுக்க பேட்டிங்கில் ஜோஸ் பட்லரை மட்டுமே சார்ந்திருந்த ராஜஸ்தான் அணிக்கு அதுவே இறுதிப்போட்டியின் வினையாக அமைந்தது. பட்லர் 39 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி.
131 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த எளிய கேட்ச் வாய்ப்பை சாஹல் தவறவிட்டார். இதுமாதிரியான குறைந்த ஸ்கோர் அடித்த ஆட்டங்களில் சிறப்பான ஃபீல்டிங்கும், கிடைக்கும் கேட்ச் வாய்ப்புகளை பற்றிக்கொள்வதுமே வெற்றிக்கு உதவும். ஆனால் முதல் ஓவரிலேயே சாஹல் கேட்ச்சை தவறவிட்டார்.
அதன்பின்னர் 2வது ஓவரில் சஹாவை பிரசித் கிருஷ்ணாவும், பவர்ப்ளேயிலேயே மேத்யூ வேடை போல்ட்டும் வீழ்த்த 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி. இலக்கு எளிதானது என்பதால், விக்கெட்டை இழந்துவிடாமல் பார்ட்னர்ஷிப் அமைத்து அடுத்த சில ஓவர்களுக்கு ஆட்டத்தை எடுத்துச்சென்றாலே ஜெயித்துவிடலாம் என்பதை அறிந்து, பாண்டியாவும் கில்லும் அதைச்செய்ய, ஆட்டம் ராஜஸ்தானுக்கு எதிராக முடிந்தது.
முதல் ஓவரில் சாஹல் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி 46 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார் கில். ஒருவேளை சாஹல் அந்த கேட்ச்சை பிடித்திருந்தால் பவர்ப்ளேயிலே 3 விக்கெட் குஜராத்துக்கு விழுந்திருக்கும். மில்லர் சீக்கிரமாகவே களத்திற்கு வந்திருக்க நேரிடும். அஷ்வினை வைத்து இடது கை வீரர்களான மில்லர், டெவாட்டியாவை வீழ்த்த திட்டமிட்டு,ராஜஸ்தான் அணி என்ன வேண்டுமானாலும் செய்திருக்க நேரிடும். ஆட்டத்திலும் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் அந்த அனைத்து வாய்ப்புகளும் சாஹல் தவறவிட்ட கேட்ச்சால் போயிற்று.
Win Big, Make Your Cricket Tales Now