
14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 88 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. ஹோபர்ட் அணி தரப்பில் ரைலீ மெரிடித் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஹோபர்ட் அணிக்கு மிட்செல் ஓவன் - மேத்யூ வேட் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இருவரும் 13 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். பின்னர் ஜோடி சேர்ந்த் நிகில் சௌத்ரீ மற்றும் டிம் டேவிட் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் டிம் டேவிட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தயதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 68 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.