
எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசனில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஓரளவு தாக்குபிடித்து விளையாடியா டேவிட் பெடிங்ஹாம் 40 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 37 ரன்களையும், மார்கோ ஜான்சன் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹார்டுஸ் வில்ஜோன் 4 விக்கெட்டுகளையும், லுதோ சிபம்லா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெவான் கான்வே 11 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 76 ரன்களையும், விஹான் லூபே 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.