
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதன் காரணமாக டிஆர்எஸ் இல்லை எனவும் ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
சாம்ஸ் வீசிய 2ஆவது பந்து கான்வேவின் பேட்டினை தாண்டிச் சென்று அவரது பேடில் பட்டது. மும்பை வீரர்கள் எல்பிடபுள்யூ கேட்டு கத்த, கள நடுவர் அவுட் என அறிவித்தார். கான்வே டிஆர்எஸ்(DRS) கோர முற்பட்டபோது, மின்வெட்டால் தற்போது அந்த வசதி இல்லை என நடுவர்கள் தெரிவித்தனர். கள நடுவர் அளித்த தீர்ப்பே இறுதியானதால் வேறு வழியின்றி பெவிலியன் திரும்பினார் டெவான் கான்வே.