
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 8ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட் கோலி ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 45 ரன்களை எட்டியது.
மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதிலும் குறிப்பாக அவர் மகேந்திர சிங் தோனியின் அபாரமான ஸ்டம்பிங்கின் மூலம் தனது விக்கெட்டை இழந்திருந்தார். அதன்படி இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பில் சால்ட் தூக்கி அடிக்கும் முயற்சியில் பந்தை முழுமையாக தவறவிட்டார்.