
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங் செய்து வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் ஃபீல்டிங் செய்யும் போது காயமடைந்தார். அதன்படி ஷாஹீன் அஃப்ரிடி வீசியா முதல் ஓவரின் இரண்டாவது பந்தை வில் யங் கவர் திசையை நோக்கி அடித்தார்.
அப்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் ஓடிய ஃபகர் ஸமான் பவுண்டரியை தடுத்து நிறுத்திய நிலையில் காயத்தை எதிர்கொண்டார். அதன்பின் அவருக்கு வலி அதிகமாக, அணி மருத்துவர்கள் களத்திற்கு வந்த அவரை பரிசோதித்தனர். பின்னர் காயம் காரணமாக ஃபகர் ஸமான் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். மேற்கொண்டு அவருக்கு பதிலாக காம்ரன் குலாம் ஃபீல்டிங் செய்து வருகிறார். இந்நிலையில் ஃபகர் ஸமான் காயமடைந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Fakhar Zaman Injury #iccchampionstrophy2025 pic.twitter.com/OUMQjknTr2
— yogendracrick (@cricketlover672) February 19, 2025