
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஷுப்மன் கில் 60 ரன்களையும், சாய் சுதர்ஷன் 56 ரன்களையும் சேர்த்த நிலையில் அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ தரப்பில் ஷர்தூல் தாக்கூர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 58 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஷ் பதோனி 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.