
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இறுதியில் மேக்ஸ் பிரண்டின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேக்ஸ் பிரண்ட் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 77 ரன்களைக் குவித்தார். மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தரப்பில் மார்க் ஸ்டெகெடீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் பென் டக்கெட், தாமஸ் ரோஜர்ஸ், சாம் ஹார்பர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய டேனியல் லாரன்ஸ் 64 ரன்களையும், கேப்டன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.