
இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் ஒரு சில அணி வீரர்கள் தங்களது பயிற்சிகளையும் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டனர். இதையடுத்து வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் இத்தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களை வாங்கியது.
முன்னதாக வீரர்கள் ஏலத்திற்கு முன் டிரேடிங் முறையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதுடன் இந்த சீசனுக்கான கேப்டனாகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனல் கடந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பாதியிலேயே காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடரிலும் விளையாடவில்லை.