
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் உள்ள ஓவால் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் குறிப்பாக அந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை.
நட்சத்திர வீரர்களான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், மேத்யூ ஷார்ட், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், கேப்டன் பாட் கம்மின்ஸ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பியதால், ஆஸ்திரேலிய அணியானது 35 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலக்கை நோக்கி இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.