
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்களையும், யாஷ் துல் 42 ரன்களையும் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனுஜ் ராவத் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்தது.
இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய உத்தர பிரதேச அணியில் பிரியம் கார்க் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 54 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் உத்தர பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.