
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசில் ஒரு ரன்னிலும், டெவான் கான்வே 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களையும், டொனோவன் ஃபெரீரா 26 ரன்களையும் சேர்த்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஜெரால்ட் கோட்ஸி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குயின்டன் டி காக் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 55 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர்.