
சமகால கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பின் இந்தியாவின் ரன் மெஷினாக உருவாகியுள்ள கேஎல் ராகுல் கடந்த 2019 உலக கோப்பைக்கு பின்பு இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் முக்கிய பேட்ஸ்மேனாக நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தடுமாறும் இந்த காலங்களில் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் ஐபிஎல் தொடரிலும் ஒவ்வொரு சீசனிலும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வருகிறார்.
அதனாலேயே 2022 சீசனில் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணிக்கு 17 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் விளையாடிய அவர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக தொகைக்கு விளையாடிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார். அதேபோல் 2020 முதல் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் அவர் இளம் வீரராக இருப்பதால் 34 வயதை கடந்துள்ள ரோஹித் சர்மாவுக்கு பின் அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பிசிசிஐ வழங்கி வருகிறது.
அதன்படி இந்த வருடம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர் துவங்க ஒருநாள் முன்பாக துரதிர்ஷ்டவசமாக வலை பயிற்சியின்போது காயமடைந்து மொத்தமாக வெளியேறினார். அதன் காரணமாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 5ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்காதது இந்தியாவின் தோல்விக்கும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலைமையில் காயத்திலிருந்து குணமடைவதற்காக ஜெர்மனிக்கு சென்ற அவர் உயர்தர அறுவை சிகிச்சையை மேற்கொண்டு சில வாரங்கள் ஓய்வெடுத்து வந்தார்.