
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - தன்ஸித் ஹசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தன்ஸித் ஹசன் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மெஹிதி ஹசன் மிராஸ், தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம் மற்றும் மஹ்முதுல்லா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நஜ்முல் ஹொசைன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார்.