
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக ஆல் ரவுண்டர் நாதன் ஸ்மித்திற்கு நியூசிலாந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றங்களும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - ரச்சின் ரவீந்திரா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ரச்சின் ரவீந்திரா 37 ரன்களில் நடையைக் கட்டினார்.