
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 201 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எவின் லூயிஸ் 100 ரன்களுடனும், அவருக்கு துணையாக விளையாடி கைம் மேயர்ஸ் 92 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளைடாடிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ் என அனைவரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த பனுகா ராஜபக்ஷா - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்த, செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது 17. 2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.