
லெஜண்ட்ஸ் 90 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்ட்டின் கப்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதன்படி நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் சத்தீஷ்கர் வாரியர்ஸ் மற்றும் பிக் பாய்ஸ் யுனிகாரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணியானது மார்ட்டின் கப்தில் மற்றும் ரிஷி தவான் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 240 ரன்களைக் குவித்து. இதில் அதிகபட்சமாக மார்ட்டின் கப்தில் 34 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரி, 16 சிக்ஸர்களுடன் 160 ரன்களையும், ரிஷி தவான் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 76 ரன்களையும் குவித்தனர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பிக் பாய்ஸ் அணியில் ராபின் பிஸ்டன் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும், சௌரவ் திவாரி 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 151 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வாரியர்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பிக் பாய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.