
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 30 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி 24 ரன்களையும் சேர்த்தனர். இஸ்லாமாபாத் யுனைடெட் தரப்பில் நசீம் ஷா, ஜேசன் ஹோல்ட, ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் கேப்டன் ஷதாப் கான் 47 ரன்களையும், அசாம் கான் 31 ரன்களையும், ஷாஹிப்சதா ஃபர்ஹான் 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியானது 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் கராச்சி கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷதாப் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.