
ஐபிஎல் தொடரின் 16அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது. இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் டூவன் யான்சன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணி சார்பாக ஜெகதீசன் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தமிழக வீரர் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வெங்கடேஷ் ஐயர், அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டர்களை விளாசி தள்ளினார். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் கேகேஆர் அணியின் மற்றொரு தொடக்க வீரர் குர்பாஸ், 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேகேஆர் அணியின் நிதிஷ் ராணா பேட்டிங் செய்ய களமிறங்கினார். கடந்த போட்டியில் சிறப்பாக ஆடியதால், அதே ஃபார்மை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் ராணா தொடக்கத்தில் நிதானம் காட்டினார். களத்தில் இரு இடதுகை பேட்டர்கள் இருந்ததால், மும்பை அணி ஹிருத்திக் ஷோக்கினை அட்டாக்கில் கொண்டு வந்தது.