
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலியின் அரைசதம்(60) மற்றும் ரோஹித் - ராகுல் அமைத்து கொடுத்த அதிரடியான தொடக்கத்தால் 20 ஓவரில் 181 ரன்கள் அடித்தது.
182 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிஸ்வான் 71 ரன்களை குவித்தார். 4ஆம் வரிசையில் இறங்கிய முகமது நவாஸ், இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கி அருமையான கேமியோ ரோல் பிளே செய்தார். 20 பந்தில் 42 ரன்களை விளாசிய நவாஸின் பேட்டிங் தான், பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக அமைந்தது.
அதன்பின்னர் ஆசிஃப் அலியும், குஷ்தில் ஷாவும் சிறப்பாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். கடைசி ஓவரில் இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பல சம்பவங்கள் பாதகமாக அமைந்தன. சாஹல் ரன்களை வாரி வழங்கியது, 18ஆவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் கேட்ச்சை விட்டது, 19ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் 19 ரன்களை வழங்கியது என பவுலிங், ஃபீல்டிங்கில் பல சொதப்பல். பேட்டிங்கிலும் சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் சோபிக்காதது பின்னடைவு.