
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷுப்மன் கில் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.