
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், அல்சொப், ஜோர்டன் காக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், எராஸ்மஸ், டிம் டேவிட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 55 ரன்காளிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய டாம் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்க்க ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வைப்பர்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபகர் ஸ்மான், சாம் கரண் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் அதன்பின் களமிறங்கிய மேக்ஸ் ஹொல்டன் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ஆடம் ஹோஸ் 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.