
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இப்போட்டி 33 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் - கியானா ஜோசப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கியானா ஜோசப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஹீலி மேத்யூஸும், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸைதா ஜேம்ஸும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் இணைந்த ஸ்டேஃபானி டெய்லர் மற்றும் சினெல்லே ஹென்றி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டெஃபானி டெய்லர் 46 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சினெல்லே ஹென்றியும் 46 ரன்களைச் சேர்த்தார்.