
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிகா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் காம்ரன் அக்மல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 19 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 17 ரன்களில் காம்ரன் அக்மலும் விக்கெட்டை இழந்தனர். மேற்கொண்டு கேப்டன் முகமது ஹஃபீசூம் 8 ரன்களுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த உமர் அமீன் மற்றும் சோயப் மாலிக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் உமர் அமீன் அரைசதம் கடந்தார். பின் இருவரும் இணைந்த 4ஆவது விக்கெட்டிற்கு 80 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் உமர் அமீன் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலியும் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சோயப் மாலிக் 46 ரன்களைச் சேர்த்து அணிக்குத் தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.