
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற 8ஆவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், சதர்லேண்ட் 38 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 31 ரன்களையும் சேர்த்து உதவ, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ஆலியா அலீன், அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 42 ரன்களையும், கியானா ஜோசப் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் விண்டீஸ் அணி 17.5 ஓவர்களில் 109 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.