நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல - குயின்டன் டி காக்!
தென் ஆப்பிரிக்க வாரியம் சொல்வதையெல்லாம் செய்வதற்கு தம்மைப் போன்ற தனிநபர் மனிதர்கள் சிப்பாய்கள் அல்ல என்று குயின்டன் டி காக் தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டீ காக் அறிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தி 3 வகையான தென்னாப்பிரிக்க அணியிலும் முதன்மை வீரராக நிரந்தர இடம் பிடித்தார்.
அதே போல ஐபிஎல் தொடரிலும் மும்பை, லக்னோ போன்ற அணிகளில் அதிரடியாக விளையாடிய அவர் இந்திய ரசிகர்களின் அபிமான வீரராகவும் பார்க்கப்படுகிறார். இருப்பினும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக கடந்த வருடம் 29 வயதிலேயே போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர், தற்போது 30 வயதில் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விடை பெற உள்ளது தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Trending
முன்னதாக துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையின் போது கிரிக்கெட்டில் இருக்கும் நிற வெறி சர்ச்சைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒற்றை காலில் மண்டியிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அதை விரும்பாத குயிண்டண் டீ காக் அப்படி செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்தார். அதன் காரணமாக அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் 2 நாட்கள் கழித்து மன்னிப்பு கேட்டதால் மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வாரியம் சொல்வதையெல்லாம் செய்வதற்கு தம்மைப் போன்ற தனிநபர் மனிதர்கள் சிப்பாய்கள் அல்ல என்று குயின்டன் டி காக் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி பேசிய அவர், “நாங்கள் தென் ஆப்பிரிக்க வாரியத்தின் சிப்பாய்கள் அல்ல. எங்களுக்கும் விருப்பங்கள் இருக்கின்றன. நிறவெறிக்கு எதிரான குரல் கொடுக்கும் நிகழ்வு வந்த போது அதை நாங்கள் அணியில் விவாதித்தோம்.
அதில் அனைவரும் அணியாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கண்ணோட்டங்கள் இருந்தன. அதனால் சில கிரிக்கெட் வீரர்கள் அப்படி மண்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்தோம். அதே சமயம் மற்ற வீரர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும் உறுதி எடுத்துக் கொண்டோம். தற்போது உலகக் கிரிக்கெட்டில் வீரர்களுக்கு அதன் வாரியங்கள் முதலாளியாக இருக்கின்றன.
அதனால் அவர்கள் ஒரு வீரர் என்ன செய்ய வேண்டும் என்ன கேட்க வேண்டும் என்பதை முடிவு செய்ய முயற்சிக்கின்றனர். இருப்பினும் இதற்கு பெரும்பாலான வீரர்கள் முடியாது என்றே சொல்வார்கள் என்று என்னால் சத்தியமாக சொல்ல முடியும். குறிப்பாக என்னுடைய உரிமைகள் பற்றி மற்றவர்கள் முடிவெடுப்பதை நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now