
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் ஓமன் நாட்டில் நடைபெற்று வர இன்னும் சில தினங்களில் முன்னணி அணிகள் விளையாட தொடங்கிவிடும். அந்த வகையில் நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி 23ஆம் தேதி இங்கிலாந்து அணியை துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய நடப்பு சாம்பியனாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்முறையும் தாங்கள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுவதே எங்களுடைய குறிக்கோள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டி20 தொடரில் விளையாடும் அந்த அணியின் முன்னணி வீரரான கிறிஸ் கெயில் குறித்து அவர் கூறுகையில், “கிறிஸ் கெய்ல் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் அளப்பரியது. இன்னும் 97 ரன்கள் அடித்தால் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராகவும் அவர் சென்று விடுவார். இருப்பினும் அது அவருடைய இலக்காக இருக்காது. எங்கள் அணிக்காக அவர் கோப்பையை கைப்பற்றி கொடுக்கவே நினைப்பார்.