எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்து அதற்கு தகுந்தார்போல் விளையாடினோம் என்று ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. அதன்படி தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைச் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆர்சிபி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரைலீ ரூஸோவ் 61 ரன்களை எடுத்தார். பந்துவீச்சில் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Trending
இப்போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இன்றைய போட்டி எங்களுக்கு சிறந்த ஆட்டமாக அமைந்தது. கடந்த 5-6 போட்டிகளாக நாங்கள் 200+ ரன்களை எடுத்துள்ளோம். ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்தோம். பந்துவீச்சில் 6-7 தேர்வுகள் இருக்கின்றன. அதனால் விக்கெட் வீழ்த்துவது முக்கியம் என்று பேசினோம்.
போட்டியில் சிறப்பாக செயல்பட ஃபார்ம் அவசியம் என்பது போல், கொஞ்சம் அதிரஷ்டமும் தேவை. இந்த சீசனின் தொடக்கத்தில் எங்கள் அணி வீரர்கள் சிலர் விக்கெட் வீழ்த்தவும், ரன் எடுக்கவும் செய்தனர். இப்போது அனைவரும் அதை செய்கிறார்கள். அது அவர்களது ஆட்டத்திறனின் வெளிப்பாடு. எங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். எங்களது வெற்றியை நாங்கள் இப்படியே தொடர விரும்புகிறோம். இதன் மூலம் எங்கள் அணி சிறந்த அணி என்பதை நிரூபிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now