
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோற்று, சொதப்பிய நிலையில், தொடரை இழக்காமல் இருக்க மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 (35), இஷான் கிஷன் 54 (35 இருவரும் சிறப்பான துவக்கம் தந்தார்கள். அடுத்து ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசியதால், இந்திய பேட்டர்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இறுதிக் கட்டத்தில் ஹார்திக் பாண்டியா 31 (21) மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக விளையாடினார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 179/5 ரன்களை சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக, பவர் பிளேவிலேயே ஸ்பின்னர்களை பயன்படுத்தியது இந்திய அணி. இதனால், பேட்டர்கள் தடுமாறினார்கள். அதிகபட்சமாக கிளாசின் 29 (24) ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹென்ட்ரிக்ஸ் 23 (20), பிரிடோரியஸ் 20 (16) ஆகியோர் மட்டுமே 20+ ரன்களை சேர்த்தார்கள். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால், தென்னாப்பிரிக்க அணி 19.1 ஓவர்கள் முடிவில் 131/10 ரன்களை மட்டும் சேர்த்து, 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.