
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களில் ஆல் அவுட்டாக, அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களில் ஆல் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநயாகன் விருதை வியான் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மஹாராஜும் கைப்பற்றினர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என்று தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.