இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங், பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லை, ஃபீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷன் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
அதன்பின் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த நபியும் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை 72 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கைகோர்த்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் நேஹால் வதேரா 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டி மிரட்டினாலும், 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Trending
மறுபுறம் திலக் வர்மா நிலைத்து நின்று விளையாடி அரைசதம் கடந்த நிலையில் 65 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். மற்றபடி கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களுக்கும் டிம் டேவிட் 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து பவுண்டரிகளை விளாசித் தள்ள முதல் ஆறு ஓவர்களிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை குவித்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் தடைபட்டது.
அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “எங்களின் இந்த தோல்விக்கு நாங்கள் தான் காரணம். எங்கள் மீது நாங்களே அழுத்தத்தை ஏற்படுத்தி கொண்டோம். திலக் வர்மா மற்றும் நேஹால் வதேரா ஆகியோரின் பேட்டிங் பிரமிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் விரைவாக சில விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் 180 ரன்களை எடுக்க முடியும் நான் நினைத்து கூட பார்க்கவில்லை. பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை, இதனால் தான் எங்களால் வெற்றிக்கு போதுமான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். பந்துவீச்சின் போதும் நாங்கள் சரியாக செயல்படவில்லை, பீல்டிங்கிலும் சொதப்பிவிட்டோம். எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் சுட்டி காட்டுவது சரியாக இருக்காது. ஒவ்வொரும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டும், தவறுகளை திருத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து வகையிலும் எங்களைவிட சிறப்பாக செயல்பட்டது என்பதே உண்மை. ஒரு அணியாக நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரிரு போட்டிகளின் முடிவை வைத்து விளையாடும் லெவனில் இருந்து சில வீரர்களை நீக்குவது ஏற்புடையது அல்ல, எனது வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதே முக்கியம் என கருதுகிறேன். தவறுகளை திருத்தி கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now