
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதிப்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியும் தங்களது வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸ்மதுல்லா ஷாஹிதி 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 97 ரன்களைச் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் 76 ரன்களையும், பெஹ்லுக்வாயோ 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.