
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுபெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை 99% உறுதி செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக குசால் பெரேரா 51 ரன்களும், மஹீஷ் தீக்ஷனா 38 ரன்கள் எடுக்க நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 172 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 45, ரச்சின் ரவீந்திரா 42, டார்ல் மிட்சேல் 43 ரன்கள் எடுத்து 23.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.
அதனால் அதிகபட்சமாக ஏஞ்சேலோ மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியாத இலங்கை ஆறுதல் வெற்றி கூட பெறாமல் இத்தொடரிலிருந்து பரிதாபமாக நாடு திரும்ப உள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் முதல் 10 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி கிடைத்ததாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.