
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களையும், டாம் லேதம் 55 ரன்களையும் சேர்த்ததன் மூலம் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.