
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்களையும், அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும், அபிஷேக் சர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்களைக் குவித்தது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் மனீஷ் பாண்டே 37 ரன்களையும், ஹர்ஷித் ரானா 34 ரன்களையும், சுனில் நரைன் 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.