
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’தாவுத் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
முன்னதாக இப்போட்டியில் மேக்ஸ் ஓ’தாவுத், கோலின் ஆக்கர்மேன், எங்கல்பேர்ச்ட், கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் என டாப் 5 பேட்ஸ்மேன்களில் 4 பேர் தேவையின்றி ரன் அவுட்டானது நெதர்லாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இந்நிலையில் டாஸ் வென்று 280 ரன்களை அடிக்க நினைத்த தங்களது அணியில் டாப் 5 பேரில் தாம் உட்பட 4 பேர் ரன் அவுட்டானது தோல்வியை கொடுத்ததாக ஸ்காட் எட்வர்ட்ஸ் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.