
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலம், திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 25 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 23 ரன்களையும், ரியான் ரிக்கெல்டன் 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.