இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம் - சாம் கரண்!
பேட்டிங்கில் நடைபெற்ற மோசமான செயல்பாடுகளே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் வித்தியாசத்தில் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அதன்படி நேற்று மதியம் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக டூப்ளிசிஸ் 84 ரன்களும், விராட் கோலி 59 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன், “இந்த போட்டியில் பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறோம். டூ பிளெஸிஸ் மற்றும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடியிருந்தாலும் போட்டி எங்களை விட்டு நழுவவில்லை என்று நினைத்தோம்.
ஆனால் பேட்டிங்கில் நாங்கள் மோசமாக சொதப்பியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. பவர்பிளே ஓவர்களிலேயே நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அதுமட்டும் இன்றி இரண்டு ரன் அவுட்டுகள் நடைபெற்றது. இப்படி பேட்டிங்கில் நடைபெற்ற மோசமான செயல்பாடுகளே எங்களது தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிச்சயம் இதுபோன்ற தவறுகள் இனிவரும் போட்டிகளில் நடக்காமல் நாங்கள் வெற்றிக்கு திரும்புவோம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now