
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்களையும், துருவ் ஜூரெல் 28 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்களையும், அவருக்கு துணையாக சமீர் ரிஸ்வி 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “பவர் பிளேக்குப் பிறகு பிட்ச் மெதுவாகவும், இரண்டு வேகமாகவும் இருந்தது என்று நினைக்கிறேன். எனவே பவர்பிளேக்குப் பிறகு நாங்கள் 170 ரன்களை அடித்தால் போதும் என்றே எதிர்பார்த்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ஸ்கோரை விட 20-25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் . இன்றைய போட்டியில் சிமர்ஜீத் சிறப்பாக பந்து வீசினார். சொந்த மைதானங்களைத் தாண்டி மற்ற மைதானங்கள் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.